தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடிக்கு எதிராக நடவடிக்கை கோரி மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மோடிக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் மனு தாக்கல் செய்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. ஏற்கனவே, கடந்த திங்கள் கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளின் நகலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
இந்த மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சரியோ, தவறோ, தேர்தல் ஆணையம், நடத்தை விதிமீறல்கள் புகார் தொடர்பாக முடிவை அறிவித்துள்ளது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் புதிய மனு தாக்கல் செய்வதற்கான வாரண்ட் ஆக இருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதன்மூலம் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிரான புகார்களுக்கு நற்சான்று அளித்ததை எதிர்த்து புதிய மனுவை தாக்கல் செய்யும் வாய்ப்பை உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு வழங்கியது.
Related Tags :
Next Story