தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டம் என தகவல்
தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்தித்து புதிய கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
புதுடெல்லி,
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல்களே எஞ்சியுள்ளன. இதனால், தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை கூட்டாக சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மத்தியில் பாரதீய ஜனதாவை எதிர்க்கும் 21 எதிர்க்கட்சிகள் ஒன்றாக கையெழுத்திட்டு மேற்கூறிய மனுவை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மாற்று அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்க தயார் என்பதற்கான கடிதத்தை அளிக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதற்கான கடிதத்தையும் அப்போது வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, அக்கட்சி, பிராந்திய கட்சிகளை பிளவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு வழங்காததை உறுதி செய்யும் நோக்கில், முன்னெப்போதும் இல்லாத வழக்கத்தை எதிர்க்கட்சிகள் தற்போது பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
543 மக்களவை தொகுதிகளை கொண்ட மக்களவையில், பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில், பாரதீய ஜனதா 282 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 336 ஆக உள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக கே ஆர் நாராயணன், வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் முன், ஆதரவு இருப்பதற்கான கடிதத்தை வழங்குமாறு கோரினார். அதன்பிறகே, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததோடு, அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார். அந்த சமயத்தில் பாரதீய ஜனதா 178 இடங்களிலும், கூட்டணியோடு சேர்த்து 252 உறுப்பினர்களும் இருந்தனர். வெளியில் இருந்து ஆதரவை பெற்ற போதிலும் பெரும்பான்மைக்கு சற்று கூடுதலான இடங்களை வாஜ்பாய் அரசு பெற்றது. இதனால், 20 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே ஒரு வாக்கில் வாஜ்பாய் அரசு ஆட்சியை இழந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் போது பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. சமீபத்தில், கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதா? தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதா? என பல கருத்துக்கள் வெளியாகின.
பாரதீய ஜனதா, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், பாரதீய ஜனதா முதலில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னதாக, எடியூரப்பா பதவி விலகி கொண்டார். இதையடுத்து, குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.
மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில், தற்போது முறைப்படி கூட்டணியில் இல்லாவிட்டாலும், பாஜகவுக்கு எதிராக 21 கட்சிகள் தேசிய அளவில் ஒன்று திரண்டு போர்க்கொடி தூக்குகின்றன.
Related Tags :
Next Story