அகங்காரம் தான் துரியோதனனின் அழிவுக்கு காரணம் மோடிக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கை
அகங்காரம்தான் துரியோதனனின் அழிவுக்கு காரணம் என பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி பிரசாரத்தில் பேசும் போது ராஜீவ் காந்தியை விமர்சனம் செய்தார். ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து பிரதமர் மோடி பேசும்போது, ‘உங்கள் தந்தை (ராஜீவ் காந்தி) கறைபடியா கரத்துக்கு சொந்தக்காரர் (மிஸ்டர் கிளீன்) என அவரது சேவகர்களால் கருதப்பட்டார். ஆனால் அவரது வாழ்க்கையோ ‘ஊழல் நம்பர் ஒன்று’ என்ற நிலையில்தான் முடிந்தது’ என்றார். கடந்த 1980–களில் பரபரப்பாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்தியை தொடர்புபடுத்தி பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.
இதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை குறைக்கிறீர்கள் என காட்டமாக எதிர்ப்பை பதிவு செய்தன.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியை சாடியுள்ள பிரியங்கா காந்தி, அகங்காரம்தான் துரியோதனனின் அழிவுக்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
அரியானாவில் ஹிசார் நகரில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி "வேறு எந்தப் பிரச்சினையும் கிடைக்காததால் என்னுடைய குடும்பத்தை அவமதிக்கிறார்கள். இந்த நாட்டில் ஒருபோதும் அகங்காரத்திற்கு மன்னிப்புக் கிடையாது. வரலாற்று ஆதாரமும் இதுதான், மகாபாரதமும் இதற்கு ஆதாரமாகும். பிரதமர் மோடியிடம் இருக்கும் அகங்காரம்தான் துரியோதனனிடம் இருந்தது. பகவான் கிருஷ்ணன் துரியோதனிடம் பேச முயற்சி செய்தபோது, அவன் கிருஷ்ணனை சிறைப்பிடிக்க முயற்சித்தான்,” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story