3-வது அணி சாத்தியமாகுமா? தென்மாநிலங்களில் இருந்து பிரதமர் வருவாரா?


3-வது அணி சாத்தியமாகுமா? தென்மாநிலங்களில் இருந்து பிரதமர் வருவாரா?
x
தினத்தந்தி 7 May 2019 1:20 PM IST (Updated: 7 May 2019 1:20 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அரசியலில் மூன்றாம் அணிக்கு ஆளும் வாய்ப்பு கிடைத்தால் தென்மாநிலங்களில் இருந்து பிரதமர் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இத்தனை  இடங்களை பாஜக வென்றதற்கு ஒரு முக்கிய காரணம், மத்திய அரசை தீர்மானிக்கும் 10 பெரிய மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெரும்பான்மையான இடத்தை அக்கட்சி வென்றதுதான். உத்தரபிரதேசம், பீகார், குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

நாட்டில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  273 பாராளுமன்ற தொகுதிகள் இந்த 7 மாநிலங்களிலும் அடங்கும். இது மொத்தம் உள்ள தொகுதிகளில் 36 சதவீதமாகும்.

2019 பாராளுமன்ற தேர்தலில் இந்த மாநிலங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளை பாரதீய ஜனதா இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் பாரதீய ஜனதா பெரும்பான்மை பெற வேண்டும் என்றால் குறைந்தது இங்கு 196 தொகுதிகளாவது கிடைக்க வேண்டும். இது சாத்தியமா  என்பது கேள்விக்குறியே?

2014 தேர்தலைப்போல இந்தமுறை பா.ஜ.க.வினால் எளிதாக வெற்றிபெற முடியாது. அதுபோல, காங்கிரஸ் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் என கூறமுடியாத நிலையே உள்ளது.

இந்தியா டுடே, சிஓட்டர்ஸ், ஏபிபி நியூஸ், இந்தியா டிவி, டைம்ஸ் நவ், சிஎன்எக்ஸ், ஹர்வி, டெக்கான் ஹரால்டு  ஆகிய செய்தி நிறுவனங்கள் ஆகஸ்ட்  2015-ல் இருந்து 19-க்கும் மேற்பட்ட  கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளன.  முதலில் பாரதீய  ஜனதா மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பில் தகவல் வெளியானது. ஆனால் கடந்த 10 கருத்து கணிப்புகளில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்க போவதில்லை  என்றே கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதனால் 3-வது அணி என்ற பேச்சு தற்போது கிளம்பி உள்ளது .

பலம் பெற்றுள்ள மாநிலக்கட்சிகள் தான் அடுத்த பிரதமரை தீர்மானிக்கிற சக்திகளாக இருக்க போகின்றன. இதைத்தான் கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்திய அரசியல் வரலாற்றில் மூன்றாவது அணி என்பது பேச்சளவில் மட்டுமே உள்ளது. பலரும் இதை அமைக்க முயன்று பயனற்றுப் போனதுதான் மிச்சம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு அணிக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு சற்று பிரகாசமாக அமைந்திருக்கிறது. ஆனால் அதனை கட்டமைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இதற்கான முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி  உள்பட பலர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பிரதமர் கனவு இல்லை என கூறுவதற்கும் இல்லை. 

மூன்றாவது அணி என்பது பெரும்பாலும் மாநில கட்சிகளால் கட்டமைக்கப்படும் ஒன்று. இந்திய அளவில் பார்த்தால் இவர்களால் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையை பெறுவதில் சிக்கல் உண்டு. இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும், இல்லையென்றால் பாஜக ஆட்சியில் இருக்கும். தனிப்பெரும் கட்சியாக இருவரில் ஒருவரே மாறுவதால், ஆட்சிப் பெரும்பான்மைக்கு உதவ மூன்றாம் அணி கட்சிகளுக்கு தூது விடுவார்கள். அரசில் இடம் என்ற கோரிக்கையோடு சில கட்சிகள் இணைவார்கள். இதனால் மூன்றாவது அணி உருவாகாமலே போய்விடும்.

தற்போது நடந்து வரும் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடம் கிடைக்காது என்பதே அரசியல் நிபுணர்கள்,  ஊடகங்களின்  கணிப்பாக உள்ளது. இந்தக் கணிப்பு உண்மையானால் ஆட்சி அமைக்க மூன்றாம் அணியின் தயவு கண்டிப்பாக தேவை. மூன்றாம் அணி என்ற ஒன்று கட்டமைக்கப்பட்டால் அது ஒற்றுமையாக இருந்தால் ஏதோ ஒரு வகையில் பாஜக, காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமராக வாய்ப்புண்டு. ஆனால் ஒற்றுமை முக்கியம்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ், நேற்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்குவது குறித்து விவாதித்ததாக தெரிகிறது. மேலும் தென் இந்தியாவிலிருந்து பிரதமர் வர வேண்டும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ், பாஜக அல்லாத 3-வது அணியை உருவாக்குவதில் கடந்த சில ஆண்டுகளாக ராவ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களுடனும் அவர் பேசி வருகிறார். நேற்று அவர் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியிடமும் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும் வரும் 13-ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினையும் ராவ் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் தி.மு.க சார்பில் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சந்திர சேகர ராவ் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story