7வது மக்களவை தேர்தல்; மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய இந்திரா காந்தி


7வது மக்களவை தேர்தல்; மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய இந்திரா காந்தி
x
தினத்தந்தி 6 May 2019 10:01 PM IST (Updated: 6 May 2019 10:01 PM IST)
t-max-icont-min-icon

7வது மக்களவை தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. #IndiraGandhi

7வது மக்களவை தேர்தல் கடந்த 1980ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.  இந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 353 தொகுதிகளை கைப்பற்றியது.  ஜனதா கட்சியானது 31 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றிருந்தது.  சரண் சிங் தலைமையிலான மதசார்பற்ற ஜனதா கட்சி 41 தொகுதிகளை வென்றது.

கடந்த 6வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஜனதா கூட்டணி அதிகாரத்தினை தக்க வைக்க முடியவில்லை.  காங்கிரசில் இருந்து வெளியேறிய சரண் சிங் மற்றும் ஜெகஜீவன் ராம் ஆகியோர் ஜனதா கூட்டணி உறுப்பினர்களாக இருந்தபொழுதும் பிரதமர் மொரார்ஜியுடன் மோதல் போக்கிலேயே இருந்தனர்.

அவசரநிலை அமலில் இருந்தபொழுது நடந்த மனித உரிமை மீறல்களை பற்றி விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் அனைத்தும் பழிவாங்கும் வகையிலேயே அமைந்திருந்தன.

கடந்த 1979ம் ஆண்டு ஜனதா கூட்டணி பிளவுபட்டது.  பாரதீய லோக் தளம் மற்றும் சோசலிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றன.  இதனை தொடர்ந்து மொரார்ஜி, நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து பதவி விலகினார்.

ஜனதா கூட்டணியில் சிலரை தக்க வைத்த சரண் சிங் அந்த ஆண்டின் ஜூனில் பிரதமராக பதவியேற்று கொண்டார்.  நாடாளுமன்றத்தில் சரண் சிங்குக்கு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் கட்சி கூறியது.  ஆனால் மக்களவையில் சிங்கின் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 2 நாட்களுக்கு முன் காங்கிரஸ் பின்வாங்கி கொண்டது.

இதனால் சரண் சிங் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து 1980ம் ஆண்டு ஜனவரியில் பொது தேர்தலுக்கு சிங் அழைப்பு விட்டார்.  ஜனதா கட்சியின் தலைவர்களுக்கு இடையேயான உட்கட்சி பூசல், நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஆகியவற்றால் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு சாதகம் ஏற்பட்டது.

தேர்தல் பிரசாரத்தில் இந்திரா காந்தியின் வலிமையான அரசு பற்றி வாக்காளர்களுக்கு நினைவூட்டப்பட்டது.

இந்த தேர்தலில் 353 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.  ஜனதா கட்சி 31 இடங்களையே பிடித்தது.  சரண் சிங்கின் மதசார்பற்ற ஜனதா கட்சி 41 தொகுதிகளில் வென்றது.  அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து ஜனதா கூட்டணி பிளவுப்பட்டு வந்தது.  ஆனால், நாட்டில் முதன்முறையாக கூட்டணி ஆட்சியை (1977ம் ஆண்டில்) ஏற்படுத்தி அரசியல் வரலாற்றில் முக்கிய தடயங்களை இந்த கூட்டணி பதித்திருந்தது.

Next Story