‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லும் என்னை கைது செய்ய முடியுமா? மம்தாவிற்கு பிரதமர் மோடி சவால்


‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லும் என்னை கைது செய்ய முடியுமா? மம்தாவிற்கு பிரதமர் மோடி சவால்
x
தினத்தந்தி 6 May 2019 8:21 PM IST (Updated: 6 May 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

விரக்தியிலிருக்கும் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் சொல்பவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.


மேற்கு வங்காளம் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கடுமையான மோதல் பிரசாரம் நடக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். சமீபத்தில் மம்தா பானர்ஜி பிரசாரத்திற்கு சென்ற போது அவருடைய கார் செல்லும் வழியில் சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். அப்போது உடனடியாக காரிலிருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அவர்களை அருகே அழைத்தார். அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். இதுபோன்று பல்வேறு பிரச்சனைகள் இருதரப்பிலும் முன்வைக்கப்படுகிறது.

தேர்தல் நடக்கும் போதும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடுமையான மோதல் போக்கு காணப்படுகிறது.

இந்நிலையில் விரக்தியிலிருக்கும் மம்தா பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் சொல்பவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். ஜார்கிராமில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,  ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிப்பவர்களை மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். நான் இன்று இங்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொன்னால், அவர் என்னை சிறையில் தள்ள முடியுமா? மம்தா பானர்ஜி, தான் பிரதமர் ஆவதற்காக மகாகூட்டணியை நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது பிரதமர் கனவு ஏற்கனவே பொய்த்துவிட்டது. அவரால் மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகள் கூட வெல்ல முடியாது என்றார். 

Next Story