குதிரை பேர பேச்சு; பிரதமர் மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ்
குதிரை பேரத்தினை தூண்டும் மற்றும் ஜனநாயகமற்ற முறையில் பேசிய பிரதமர் மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காள மாநிலம் ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர், மே 23ந்தேதி தேர்தல் முடிவு வரும்போது தாமரை எல்லா இடங்களிலும் மலரும். உங்கள் எம்.எல்.ஏ.க்கள் உங்களை விட்டு விலகி விடுவர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் இன்றுவரை எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என பேசினார். அவரது இந்த பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலவை எம்.பி. தெரீக் பிரையன் கண்டனம் தெரிவித்ததுடன், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என கூறினார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சி எழுதியுள்ள கடிதத்தில், முறையற்ற மற்றும் சட்டவிரோத முறையில் பிரசாரத்தில் ஈடுபட்ட மற்றும் பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
குதிரை பேரம் நடத்தும் வகையிலான இந்த பொய்யை பயன்படுத்தி வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அவர் இப்படி பேசியது அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமளிக்கிறது.
அவர் பேசியதற்கான சான்று பற்றி நீங்கள் மோடியிடம் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் வைக்கிறோம். அவர் தக்க சான்றினை சமர்ப்பிக்க தவறினால் தேர்தல் நடத்தை விதியை மீறும் வகையில், தூண்டக்கூடிய மற்றும் ஜனநாயகமற்ற முறையில் பேசியதற்காக பிரதமர் மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story