பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டி


பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டி
x
தினத்தந்தி 29 April 2019 4:42 PM IST (Updated: 29 April 2019 4:42 PM IST)
t-max-icont-min-icon

எல்லை பாதுகாப்பு படையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

லக்னோ,

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.  வருகிற மே 19ந்தேதி நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது.  இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதி நாள் இன்று ஆகும்.

இந்த நிலையில், இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கி உள்ளது.  இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர்.

வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அவர் புகார் எழுப்பினார்.  தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த புகார் குறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற புகார் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.  ஆதாரமற்ற புகார்களை கூறி களங்கம் ஏற்படுத்தியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என எல்லை பாதுகாப்பு படை வட்டார தகவல் தெரிவித்தது.

இதன்பின், ஹரியானாவின் ரேவரியில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் என்னவெனில், பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் என்றார்.

இந்த நிலையில், அவரை பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியின் வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி நிறுத்தி உள்ளது.

Next Story