நாடாளுமன்றத்துக்கு 4-வது கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது நாளை ஓட்டுப்பதிவு
நாடாளுமன்றத்துக்கு நான்காவது கட்ட தேர்தலை சந்திக்கிற 9 மாநிலங்களின் 72 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல், பரபரப்பான 4-வது கட்டத்தை எட்டி உள்ளது.
பீகாரில் 5, ஜார்கண்டில் 3, மத்திய பிரதேசத்தில் 6, மராட்டியத்தில் 17, ஒடிசாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13, மேற்கு வங்காளத்தில் 8, காஷ்மீரில் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) என 9 மாநிலங்களில் 72 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பா.ஜனதாவுக்கு முக்கியம்
இந்த நான்காவது கட்ட தேர்தல், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு முக்கியமானது.
ஏனெனில் கடந்த 2014 தேர்தலில், இவற்றில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றி இருந்தது. இந்த 45 தொகுதிகளில் ராஜஸ்தானில் 13, உத்தரபிரதேசத்தில் 12, மத்திய பிரதேசத்தில் 5, பீகாரில் 3, ஜார்கண்டில் 3, மராட்டியத்தில் 8, மேற்கு வங்காளத்தில் 1 தொகுதி அடங்கும்.
ஒடிசாவில் சட்டசபை தேர்தலில் 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 42 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
முக்கிய தலைவர்கள்
இந்த 4-வது கட்ட தேர்தலில் முக்கிய தலைவர்கள் பலர் களத்தில் உள்ளனர்.
பீகாரில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் (பா.ஜனதா) பெகுசாராய் தொகுதியில் மாணவர் தலைவர் கன்னையா குமாருடன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) மோதுகிறார். தர்பங்கா தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
மராட்டியத்தில் மும்பை மாநகரில் அனைத்து தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா (மும்பை தெற்கு), நடிகை ஊர்மிளா (மும்பை வடக்கு), பிரியா தத் (மும்பை வடமத்தி), பாரதீய ஜனதா கட்சியின் பூனம் மகாஜன் (மும்பை வடமத்தி) ஆகியோர் உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (கன்னாஜ்), பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமியார் சாக்ஷி மகராஜ் (உன்னாவ்), காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா (தாருஹரா) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக இருக்கின்றனர்.
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் மகன் வைபவ் (ஜோத்பூர்-காங்கிரஸ்), முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங் (ஜலவார் பரன்- பாரதீய ஜனதா கட்சி) முக்கிய வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர்.
மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவும் (பாரதீய ஜனதா கட்சி), நடிகை மூன்மூன்சென்னும் (திரிணாமுல் காங்கிரஸ்) அசன்சோல் தொகுதியில் களம் காண்கின்றனர்.
பிரசாரம் ஓய்ந்தது
இந்த 4-ம் கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத் பவார், பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
72 தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம், கன்னாஜில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.
நாளை ஓட்டுப்பதிவு
நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களையும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘விவிபாட்’ எந்திரங்களையும் எடுத்துச் செல்லும் பணி தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story