அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்பு


அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்பு
x
தினத்தந்தி 22 April 2019 1:01 PM IST (Updated: 22 April 2019 1:01 PM IST)
t-max-icont-min-icon

அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமேதி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வழக்கம்போல இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மே மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக ராகுல் காந்தி வேட்பு மனுதாக்கல் செய்து விட்டார்.  

அமேதி தொகுதியில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி வேட்பு மனுவோடு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் மீது சுயேச்சை வேட்பாளர் துருவலால் மனோகர், அப்சல் வாரிஸ், சுரேஷ் சந்திரா, சுரேஷ் குமார் ஆகியோர் பிரச்சினை எழுப்பினர்.

குறிப்பாக அவர்கள் ராகுல் காந்தியின் பெயர், தேசியத்துவம் (இந்தியரா?), கல்வி ஆகிய 3 அம்சங்களில் பிரச்சினை எழுப்பினர். ராகுல் காந்தியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதில் பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்று ராகுல் காந்தியின் வக்கீல் ராகுல் கவுசிக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் 22-ந் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு விசாரணை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ராம் மனோகர் மிஷ்ரா அறிவித்தார்.

மேலும் இந்தப் பிரச்சினையால் அமேதி தொகுதியில் போட்டியிடுகிற 36 வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனையையும் அவர் 22-ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார். தள்ளிவைக்கப்பட்ட வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில், ராகுல் காந்தியின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். 

Next Story