இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி? - பிரதமர் மோடி வெளியிட்ட ரகசியம்


இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி? - பிரதமர் மோடி வெளியிட்ட ரகசியம்
x
தினத்தந்தி 22 April 2019 5:00 AM IST (Updated: 22 April 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி என்ற ரகசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

காந்திநகர்,

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு பறந்து சென்று, அங்குள்ள பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டுகளை போட்டு அழித்தன. ஆனால் அதற்கு அடுத்த நாளே (பிப்ரவரி 27-ந் தேதி), பாகிஸ்தான் தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது.

உஷார் நிலையில் இருந்த இந்திய விமானப்படை, அந்த விமானங்களை விரட்டியடித்தது. பாகிஸ்தானின் ‘எப்-16’ ரக போர் விமானம் ஒன்றை சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அதே நேரம், அவரது விமானமும் தாக்குதலுக்கு உள்ளானது. அவரும் சிறை பிடிக்கப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் மார்ச் 1-ந் தேதி அவர் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்.

அவர் எப்படி விடுவிக்கப்பட்டார் என்ற ரகசியத்தை தனது சொந்த மாநிலமான குஜராத்தில் படான் என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இது பற்றி அவர் பேசுகையில், “அபிநந்தன் பிடிபட்ட உடனேயே இது குறித்து நான் உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. நாங்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினோம். எங்கள் விமானிக்கு ஏதாவது நேர்ந்தால், எங்களுக்கு மோடி இப்படி செய்து விட்டார் என்று நீங்கள் உலகத்துக்கு கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் என பாகிஸ்தானை எச்சரித்தோம்” என கூறினார்.

மேலும், “இரண்டாம் நாளில் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர், மோடி 12 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அவற்றைக் கொண்டு அவர் தாக்குதல் நடத்துவார். நிலைமை மோசமாகி விடும் என்று எச்சரித்தார். அதைத் தொடர்ந்துதான் நமது விமானியை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது” என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

அத்துடன், “ இதை சொன்னது அமெரிக்காதான். அதைப் பற்றி இப்போது நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. நேரம் வரும்போது இதுபற்றி சொல்வேன்” எனவும் அவர் சொன்னார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தனது மகள் சுப்ரியா சுலே போட்டியிடும் மராட்டிய மாநிலம், பாரமதி தொகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். இப்போது அவர், “அடுத்து மோடி என்ன செய்வார் என்பது எனக்கு தெரியவில்லை, அதை நினைத்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது” என குறிப்பிட்டார்.

இதற்கும் நரேந்திர மோடி பதில் அளித்தார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “ மோடி அடுத்து என்ன செய்வார் என்று எனக்கு தெரியாது என்று சரத்பவார் சொல்லி இருக்கிறார். மோடி நாளை என்ன செய்வார் என்பது சரத் பவாருக்கே தெரியாவிட்டால், இம்ரான்கானுக்கு எப்படி தெரியும்?” என கேள்வி எழுப்பினார்.

இறுதியில், குஜராத் மக்கள் மண்ணின் மைந்தனான தனக்கு 26 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றி தேடித்தருவது கடமை என கூறிய மோடி, “ எனது அரசு மீண்டும் பதவி ஏற்கும் என்பது உறுதி. ஆனால் குஜராத்தில் 26 இடங்களும் எனக்கு கிடைக்காவிட்டால், குஜராத்தில் என்ன ஆயிற்று இந்த மோடிக்கு என மே 23-ந் தேதி டி.வி. சேனல்கள் விவாதிக்க தொடங்கி விடும்” என குறிப்பிட்டார்.

குஜராத் பிரசாரத்தை முடித்து விட்டு ராஜஸ்தானில் சித்தோர்காரில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போதும் அவர் நாட்டின் பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பி பேசினார்.

அவர், “மோடி தனது மீதான தாக்குதல்களை தாங்கிக்கொள்வார், தனது அரசியல் எதிர்காலம் குறித்து எந்த ஆபத்தையும் தாங்கிக்கொள்வார். ஆனால் இந்த நாட்டை தாழ்ந்து போக விட மாட்டார் என்று நாடு என்மீது நம்பிக்கை வைத்துள்ளது” என்று கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளாக தனது அரசு வறுமை, படிப்பறிவின்மை, பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை எதிர்த்து போராடி வந்திருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.


Next Story