மோடியை போல் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் - மாயாவதி


மோடியை போல் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் - மாயாவதி
x
தினத்தந்தி 19 April 2019 4:11 PM IST (Updated: 19 April 2019 4:11 PM IST)
t-max-icont-min-icon

மோடியை போல் அல்லாமல், பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ் என மாயாவதி கூறினார்.

 லக்னோ.

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பிரசாரங்கள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அரசியல் உலகில் எதிரெதிர் துருவங்களாக திகழ்ந்த முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் இன்று ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். கடந்த 1995 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி தொண்டர்களால் மாயாவதி மோசமாக தாக்கப்பட்டார். அதுமுதல் இவ்விரு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்து வந்தன.

இதனை தொடர்ந்து முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவிடம் கட்சி வந்த பிறகு தற்போதைய மக்களவை தேர்தலுக்காக பாஜகவை எதிர்த்து இவ்விரு கட்சிகளும் ஒன்றாக இணைந்தன. இந்நிலையில் மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை ஆதரித்து இன்று மாயாவதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது முலாயம் சிங் யாதவ் மற்றும் மாயாவதி இருவரும் இணைந்து தொண்டர்கள் மத்தியில் பேசினர். 

முலாயம்சிங் யாதவ் கூட்டத்தில் பேசும்போது "நீண்ட காலத்துக்குப்பின் நானும், மாயாவதியும் சேர்ந்துள்ளோம். பழைய விஷயங்களை மறந்து சேர்ந்துள்ளோம். இதை நான் வரவேற்கிறேன், அவருக்கு நன்றி சொல்கிறேன். எனக்கு அளிக்கும் மரியாதையை மாயாவதிக்கும் தொண்டர்கள் அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசுகையில், "சில நேரங்களில் கடினமான சூழல் ஏற்படும்போது, கட்சியின் நலன், தேசத்தின் நலன் கருதி கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும். அதுபோலத்தான் இப்போது நான் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளேன்.

நான் முலாயம்சிங் யாதவுக்கு ஆதரவாக ஏன் பிரசாரம் செய்கிறேன் என்று மக்கள் வியப்பாக இருப்பார்கள் என எனக்குத் தெரியும். பழைய கசப்பான சம்பவங்களான விருந்தினர் மாளிகை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை மறந்துதான் இந்த முடிவை எடுத்தேன்.

சமூகத்தில் அனைத்து தளத்தில் உள்ள மக்களையும் சமாஜ்வாதி எனும் கட்சியின் கீழ் கொண்டு சென்றவர் முலாயம்சிங் யாதவ் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் முலாயம்சிங் யாதவ் சிறந்த தலைவர். குறிப்பாக நரேந்திர மோடி போல் போலி தலைவர்  அல்லாது, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர் முலாயம் சிங் யாதவ்" என கூறினார்.

Next Story