டெல்லி விமான நிலையத்தில் தங்க கடத்தல்; ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது

டெல்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்ற விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாங்காக் நகரில் இருந்து பயணி ஒருவர் வந்திறங்கினார். அவரை அதிகாரிகள் தடுத்து சோதனை நடத்தினர். அவருக்கு உதவியாக இருந்த ஏர் இந்தியா ஊழியர் ஒருவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பயணிக்கு தங்க கடத்தலுக்கு உதவியாக ஊழியர் செயல்பட்டது தெரிய வந்தது.
அந்த பயணியின் உடைமைகளில் நடந்த சோதனையில் மொத்தம் 600 கிராம் எடை கொண்ட ரூ.17.18 லட்சம் மதிப்பிலான வளையல் போன்ற வடிவம் கொண்ட 2 தங்க கம்பிகள் கைப்பற்றப்பட்டன.
இந்த பயணி, இதற்கு முன் அகமதாபாத் விமான நிலையத்தில் 300 கிராம் எடை கொண்ட தங்க கடத்தலில் ஈடுபட்டது பற்றியும் ஒப்பு கொண்டுள்ளார்.
இதேபோன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் வேறு சில பயணிகளுக்கு உதவியாக இருந்தது பற்றி ஏர் இந்தியா ஊழியர் ஒப்பு கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பயணி மற்றும் ஊழியர் இருவரும் கைது செய்யப்பட்டதுடன் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.