புதுடெல்லி: ஜெயின் துறவி தருண் சாகர் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்


புதுடெல்லி: ஜெயின் துறவி தருண் சாகர் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 1 Sept 2018 11:05 AM IST (Updated: 1 Sept 2018 11:05 AM IST)
t-max-icont-min-icon

ஜெயின் துறவியான தருண் சாகரின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #PMModi #JainMonkTarunSagar

புதுடெல்லி,

ஜெயின் துறவியான தருண் சாகர் இன்று காலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 51.  கிழக்கு டெல்லியில் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ராதாபுரி ஜெயின் கோவிலில் இன்று அதிகாலை 3 மணியளவில் துறவி தருண் சாகரின் உயிர் பிரிந்தது.

துறவி தருண் சாகரது இயற்பெயர் பவன் குமார் ஜெயின். இவர் 1967ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதி மத்திய பிரதேசத்தில் தோகா மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஜெயின் சமூகத்தில் ஏராளமான பக்தர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று காலை துறவி தருண் சாகரது உயிர் பிரிந்தது.

துறவி தருண் சாகரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த டுவிட்டர் பதிவில், ‘முனி தருண் சாகர் ஜி மகராஜ்-ன் மறைவு மிகுந்த மன வலியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயர்ந்த சிந்தனைகளுக்கும், சமூகத்திற்கான பங்களிப்பும் என்றென்றும் நினைவில் இருக்கும், அவரது உன்னத போதனைகள் மக்களுக்கு ஊக்கமளிக்கும். எனது எண்ணங்கள் ஜெயின் சமூகம் மற்றும் அவரது எண்ணற்ற சீடர்களுடன் என்றும் இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் துறவி தருண் சாகரது மறைவுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் மற்றும் ராஜஸ்தான் முதல்மந்திரி வசுந்தரா ராஜே ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story