இந்தியா–தென்கொரியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா–தென்கொரியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. #SouthKorea
புதுடெல்லி,
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் 4 நாள் அரசுமுறைப் பயணமாக தனது மனைவி கிம் சுங் சூக்குடன் கடந்த 8–ந்தேதி இந்தியா வந்தார்.
இன்று காலை அவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவருடைய மனைவி சவீதா, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மூன் ஜே இன்னுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை மூன் ஜே இன் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் கொரிய தீபகற்ப பிரச்சினை, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினர்.
அப்போது மனித குலத்துக்கும், உலக அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக திகழும் பயங்கரவாத்தை இருவரும் வன்மையாக கண்டித்தனர். எந்த விதத்திலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகளை அவர்கள் வற்புறுத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியும் அவர் விவாதித்தனர். குறிப்பாக ராணுவ பங்களிப்பில் சிறப்பு கவனம் செலுத்த முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் உயர் பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது இந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட முழுமையான பொருளாதார கூட்டுறவு, ராணுவம், வர்த்தகம், அறிவியல், உயிரி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சிறு, குறு தொழில் முனைவோர் ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
Related Tags :
Next Story