‘நிபா’ வைரஸ் பரவ வவ்வால் காரணம் அல்ல மத்திய குழு ஆய்வில் கண்டுபிடிப்பு
கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுடெல்லி,
கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோயை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய மருத்துவ குழு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வவ்வால்கள் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவுவதாக கருதப்படுவதால், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வவ்வால்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன.
வவ்வால்களில் இருந்து 7 மாதிரிகளும், பன்றிகளில் இருந்து 2 மாதிரிகளும் உள்பட மொத்தம் 21 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவை மத்தியபிரதேச மாநிலம் போபால் மற்றும் மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தேசிய ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த பரிசோதனையில், வவ்வால்களோ, பன்றிகளோ ‘நிபா’ வைரஸ் பரவலுக்கு காரணம் அல்ல என்று தெரிய வந்துள்ளது. எனவே, வேறு என்ன காரணம் என்று கண்டறியும் முயற்சியில் மத்திய குழு ஈடுபட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், கேரள மாநிலத்தில் மட்டுமே ‘நிபா’ வைரஸ் தாக்குதல் இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.