ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விருது வழங்க முடிவு செய்யப்படவில்லை ‘நம்ம பெங்களூரு பவுண்டேசன்’ அமைப்பு விளக்கம்
ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு விருது வழங்க முடிவு செய்யப்படவில்லை என்று ‘நம்ம பெங்களூரு பவுண்டேசன்’ அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. தற்போது அவர் ஐ.ஜி. அந்தஸ்தில் ஊர்க்காவல் படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ‘நம்ம பெங்களூரு பவுண்டேசன்‘ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரி என்ற பிரிவில் ரூபாவுக்கு விருது வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 23-ந் தேதி ரூபா, அந்த தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், ‘என்னை பெருமைப்படுத்தும் வகையில் ‘நம்ம பெங்களூரு விருது‘ வழங்க முடிவு செய்திருப்பதற்கு மகிழ்ச்சி. ஆனாலும், விருதையும், பரிசு தொகையையும் ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது. அரசு அதிகாரிகள் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகளுடன் நடுநிலையோடு செயல்பட வேண்டும்‘ என்பன உள்பட பல்வேறு விவரங்களை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தொண்டு நிறுவனத்தின் தலைவரும், பா.ஜனதா கட்சியை சேர்ந்த டெல்லி மேல்சபை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று கூறுகையில், ‘விருதுக்கான நபர்களை தேர்வு செய்யும் குழுவுடன் ரூபா நேரிடையாக தொடர்பு வைத்து இருக்கிறார். அப்படி இல்லையென்றால், விருது வழங்க தேர்வு செய்யப்படும் விவரங்கள் பற்றி ரூபாவுக்கு எப்படி தெரியும். இதுபோன்ற பிரச்சினையை தவிர்க்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் விருது வழங்க முடிவு செய்யபடவில்லை‘ என்றார்.
Related Tags :
Next Story