கார்த்தி சிதம்பரத்தின் காவலை மேலும் 8 நாட்கள் நீட்டிக்க சிபிஐ மனு


கார்த்தி சிதம்பரத்தின் காவலை மேலும் 8 நாட்கள் நீட்டிக்க சிபிஐ மனு
x
தினத்தந்தி 6 March 2018 12:29 PM IST (Updated: 6 March 2018 1:19 PM IST)
t-max-icont-min-icon

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐ நீதிமன்றத்தில் மனு செய்து உள்ளது. #INXMediacase #KartiChidambaram #SupremeCourt

புதுடெல்லி,

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கடந்த 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், அந்த காவல் மேலும் 5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சிபிஐ காவல் நிறைவடையவிருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜி, மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரிடமும் கூட்டாக விசாரணை நடத்த முடிவு செய்த சிபிஐ அதிகாரிகள், கார்த்தி சிதம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை மும்பை அழைத்துச் சென்றனர். சிறையில் இருவரிடமும் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கார்த்தி சிதம்பரத்தின்  காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தை பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மகன் கார்த்தி சிதம்பரத்தை பார்க்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் வருகை தந்தார்.  ப.சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம்  நீதிமன்ற வளாகத்தில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து  நிலம் விசாரித்தனர்.

விசாரணையில் கார்த்தி சரியாக ஒத்துழைக்காததால் கார்த்தி சிதம்பரத்தின் காவலை மேலும் 8 நாட்கள் நீட்டிக்க கோரி, சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்தது. 

இந்த விசாரணை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story