லோக்பால் கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்தது மல்லிகார்ஜுன கார்கே, பிரதமருக்கு கடிதம்

லோக்பால் கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்தது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நேற்று லோக்பால் தேர்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெறும் சிறப்பு அழைப்பாளராக அந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது எனக்கூறி காங்கிரஸ் கட்சி இந்த கூட்டத்தை புறக்கணித்தது.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், ஊழலுக்கு எதிரான மிகவும் முக்கியமான கண்காணிப்பு அமைப்பை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகளின் சுதந்திரமான குரலை புறந்தள்ளவே இத்தகைய சிறப்பு அழைப்பாளர் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
லோக்பால் மற்றும் லோக்அயுக்தா சட்டம் 2013-ன் வீரியத்தை குறைக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ள கார்கே, எதிர்க்கட்சிகளின் அர்த்தமுள்ள, உறுதியான பங்கேற்புக்கு பதிலாக வெறும் ஏட்டளவிலான நடைமுறைகளை பின்பற்றவே அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோக்பால் மற்றும் லோக்அயுக்தா சட்டம் 2013-ன்படி மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் மட்டுமே தேர்வுக்குழு உறுப்பினராக முடியும். ஆனால் கார்கேவுக்கு இன்னும் எதிர்க்கட்சித்தலைவர் அந்தஸ்து அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story