அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி
![அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி](https://img.dailythanthi.com/Articles/2018/Feb/201802240159114332_Dhanush-missile-successfully-test_SECVPF.gif)
இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்த தனுஷ் ஏவுகணை சோதனை நேற்று காலை நடத்தப்பட்டது.
புவனேசுவரம்,
ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகம் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு போர்க்கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை 350 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
தரை வழியில் இருந்து தரைவழியாக சென்று குறிப்பாக கடலுக்குள் உள்ள இலக்கு மற்றும் கடலோர இலக்குகளை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மேலும் 750 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்ல இயலும். திரவ சக்தியால் இயக்கப்படும் இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.
இதை மேம்படுத்திடும் விதமாக தற்போது இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக குறைந்த எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்துசென்று 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் விதமாக மேம்படுத்தப்படும் என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.