2ஜி ஒதுக்கீட்டில் இழப்பு கட்டுக்கதை என்பது நிரூபணம் ஆ.ராசா பேட்டி


2ஜி ஒதுக்கீட்டில் இழப்பு கட்டுக்கதை என்பது நிரூபணம் ஆ.ராசா பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2017 11:15 PM (Updated: 21 Dec 2017 9:28 PM)
t-max-icont-min-icon

2ஜி ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக யூகித்தது, இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதை என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக ஆ.ராசா கூறினார்.

புதுடெல்லி, 

2ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்திருந்தேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். ஒரு நாள் கூட வாய்தா கேட்கவில்லை.

சாட்சி கூண்டில் ஏறும் துணிச்சலும், தன்னம்பிக்கையும் எனக்கு இருந்தது. அங்கு சாட்சியம் அளித்தேன். சி.பி.ஐ.யின் குறுக்கு விசாரணைக்கும் என்னை உட்படுத்திக் கொண்டேன். இது, நாட்டின் குற்றவியல் விசாரணைகளில் எப்போதும் இல்லாதது.

நான் அளித்த சாட்சியம், நம்பகத்தன்மையுடனும், அரசு பதிவேடுகளுடன் ஒத்துப்போவதாகவும் நீதிபதியே பலதடவை கூறியுள்ளார். ஆனால், அரசுத்தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை என்று நிராகரிக்கப்பட்டன.

இந்த வழக்கு, அரசுத்தரப்பு நிரூபிக்க தவறிய வழக்கு மட்டுமின்றி, அரசுத்தரப்பு வழக்கே பொய்யானது என்று நீதிபதி கூறியுள்ளார். இதைத்தான் வழக்கின் முதல் நாளில் இருந்தே நான் கூறி வந்தேன்.

எனது செயல்கள் மீதும், நாட்டின் நீதித்துறை மீதும் நான் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை சரியானதே என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையை சொல்லப்போனால், நான் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியே செய்தேன். புரட்சி செய்தவர்களை ‘கிரிமினல்’ என்று குற்றம் சாட்டுவது வரலாற்றில் புதிதல்ல.

நான் தேசிய தொலைத்தொடர்பு கொள்கைக்கு உட்பட்டும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ சிபாரிசுகளின்படியும்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன். எனது முடிவுகளால், செல்போன் அழைப்பு கட்டணம் அடி மட்டத்துக்கு சென்றது. இதனால், நாட்டு மக்கள், குறிப்பாக ஏழைகள் பலன் அடைந்தனர். எனவே, எனது செயல்பாடுகள், நாட்டு மக்களின் நலனுக்கானவை.

இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே கூட, ஏழைகள் குறைவான அழைப்பு கட்டணத்தில் செல்போன் பயன்படுத்தி வருவதை எல்லோரும் பார்த்து வருகிறார்கள்.

ஆனால், சில அக்கறையுள்ள சக்திகள், ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு, புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை பயன்படுத்தி, மக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கினர். 2ஜி ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் கூறியது, இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதை என்பது நிரூபணமாகி விட்டது.

இந்த நேரத்தில், நான் சிறையில் இருந்த 15 மாதங்கள் உள்பட எனது வாழ்க்கையின் கருப்பு நாட்களில் எனக்கு இடைவிடாமல் ஆதரவு அளித்த தி.மு.க. தலைவருக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆ.ராசா கூறினார். 

Next Story