தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு நீதிபதி சைனி கண்டனம்


தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கு நீதிபதி சைனி கண்டனம்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 22 Dec 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

2ஜி வழக்கு தீர்ப்பில், மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளுக்கு நீதிபதி சைனி கண்டனம் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

2ஜி வழக்கு தீர்ப்பில், நீதிபதி ஓ.பி.சைனி கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில், சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நன்கு திட்டமிடப்பட்டதாக இருந்தது. ஆனால், அதில் உண்மைக்கு புறம்பான விவரங்கள் இடம்பெற்று இருந்தன.

மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் செயல்பாடற்ற தன்மையால், அவர்களின் கூற்றை யாரும் நம்பவில்லை. நடக்காத ஊழலை எல்லோரும் பார்க்க வேண்டி இருந்தது.

ஊழலை உருவாக்கினர்

ஆகவே, சிலர் தந்திரமாக சில குறிப்பிட்ட விவரங்களை ஏற்பாடு செய்து ஒரு ஊழலை உருவாக்கினர். விண்ணை முட்டும் அளவுக்கு அதை மிகைப்படுத்தினர்.

தொலைத்தொடர்பு துறையின் கொள்கை முடிவுகள், வெவ்வேறு கோப்புகளில் சிதறி கிடக்கின்றன. அதனால், விசாரணை அமைப்புகள் அதை அடையாளம் காண்பதும், சரியான கோணத்தில் புரிந்துகொள்வதும் சிரமமாகி விட்டது. அதுவே, சர்ச்சைக்கும் இடமளித்து விட்டது.

மனம்போன போக்கில்..

தொலைத்தொடர்பு துறையின் கோப்புகள், சின்ன சின்ன விஷயத்துக்காக கூட ஒழுங்கற்ற முறையில் அவசரகதியில் திறந்து மூடப்பட்டுள்ளன. ஒரு கோப்பை ஓரிடத்தில் வரிசைக்கிரமமாக வைக்க வேண்டும் என்ற முறை பின்பற்றப்படவில்லை.

ஒரு விவகாரம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், மனம்போன போக்கில் எந்த கோப்பிலும் இடைச்செருகலாக சொருகி வைக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு குறிப்பிட்ட விவகாரத்தை அணுக எத்தனை கோப்புகள் திறக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்வது சிரமமாகி விட்டது.

இப்படி கொள்கை முடிவுகளை வெவ்வேறு கோப்புகளில் இணைத்ததாலும், அவற்றை கண்டுபிடிப்பது இயலாத காரியமாக இருந்ததாலும், பிரச்சினைகளை புரிந்து கொள்வது எவருக்குமே சிரமமான காரியம்தான்.

குழப்பம்

பிரச்சினைகளை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை, ஏதாவது பெரிய தவறு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு இட்டுச்சென்றது. ஆனால், கோர்ட்டு ஆவணங்களின்படி, எந்த தவறும் நடக்கவில்லை. தொலைத்தொடர்பு துறை, மற்றவர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யாததாலும், அதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாததாலும் இந்த வழக்கில் சர்ச்சை உண்டானது.

கொள்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெளிவு இல்லாததாலும் குழப்பம் அதிகரித்தது. வழிகாட்டு நெறிமுறைகள், தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கே புரியாத வார்த்தைகளில் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தொலைத்தொடர்பு அதிகாரிகளே புரிந்து கொள்ள முடியாதபோது, அந்த நெறிமுறைகளை மீறியதாக கம்பெனிகளையும், மற்றவர்களையும் அதிகாரிகள் எப்படி குற்றம் சாட்ட முடியும்? இந்த வார்த்தைகள் புரியாமல், குழப்பத்துக்கு இட்டுச்செல்கிறது என்று தெரிந்தும், அதை சரி செய்யாமல் இருந்ததுதான் மிகவும் மோசமானது.

இவ்வாறு நீதிபதி ஓ.பி.சைனி கூறியுள்ளார். 

Next Story