இந்துக்களின் நம்பிக்கை மீது காங்கிரஸ் விளையாடுகிறது: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
இந்துக்களின் நம்பிக்கையோடு காங்கிரஸ் விளையாடுகிறது என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
அகமதாபாத்,
இந்து சமய மக்களின் நம்பிக்கைகளோடு காங்கிரஸ் விளையாடுகிறது என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன் தினம் அயோத்தி நிலப்பிர்ச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் சார்பில் வாதாடிய மூத்த வக்கீலான கபில்சிபில்,2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கபில் சிபிலின் இந்த வாதத்தை பிரதமர் மோடியும் கண்டித்துள்ளார். அதேபோல், சன்னி வக்பு வாரியமும் கபில் சிபிலின் வாதம் தவறானது என்று தெரிவித்தது.
இந்த நிலையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது:- “ இந்துக்களின் மத நம்பிக்கையோடு காங்கிரஸ் விளையாடி வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை பார்க்க விரும்புகிறதா இல்லையா என்பதை காங்கிரஸ் தெளிவு படுத்த வேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த பொழுது, ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட போது, ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோரின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி காங்கிரஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. ராகுல் காந்தி முன்பு ஒரு சமயத்தில், பெண்களை கேலி செய்யவே, மக்கள் கோவிலுக்கு செல்வதாக கூறி இருந்தார். தற்போது ஏன்? ராகுல்காந்தி கோவிலுக்கு செல்கிறார். கோவிலுக்கு செல்வதில் எந்த தவறும் இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் கோவிலுக்கு செல்ல வேண்டும் பாசாங்குத்தனமாக செல்லக்கூடாது” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story