மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுகிறது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபடுகிறது
x
தினத்தந்தி 9 Oct 2017 4:45 AM IST (Updated: 9 Oct 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

கேரளாவில் பா.ஜ.க. தொண்டர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருவதை கண்டிக்கும் விதமாக டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் ‘ஜன் ரக்ஷா யாத்ரா’ என்கிற பெயரில் கண்டன பேரணி நடத்தப்பட்டது.

இது, கன்னாட் பிளேசில் இருந்து கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகம் வரை நடந்தது.

இந்த பேரணியில், அமித் ஷாவுடன், பா.ஜ.க. மாநில தலைவர் மனோஜ் திவாரி, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பேரணியின் போது அமித் ஷா தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘கேரளாவில் இடது சாரி கட்சி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் சாதாரணமாக கொல்லப்படவில்லை. மிகவும் கொடூரமாக உடல் துண்டுதுண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சை பின்பற்றுபவர்களுக்கு இதுதான் கதி என அச்சுறுத்துகிற வகையில் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால் அவர்கள் இதே போன்ற கொலைகளை மீண்டும் மீண்டும் செய்கிறபோது அங்கு தாமரை சிறப்பாக மலரும்.

முதல்–மந்திரி பினராயி விஜயனின் சொந்த மாவட்டத்தில்தான் அதிக கொலைகள் நடந்து உள்ளன. இந்த விவகாரத்தில் அவர் வெளிப்படை தன்மையுடன் செயல்படவில்லை.

அரசியல் வன்முறை என்பது கம்யூனிஸ்டுகளின் இயல்பாகும். கேரளாவில் நடந்தவை எவையும் தன்னிச்சையானது அல்ல. கம்யூனிஸ்டுகள் நீண்ட காலமாக ஆண்டுவந்த மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா, கேரளாவில் அதிகப்படியாக அரசியல் வன்முறைகள் அரங்கேறி உள்ளன.

இதன் மூலம் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என நினைக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், காங்கிரசுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். கம்யூனிஸ்டுகள் உலகத்தை விட்டே மறைந்துவிட்டார்கள். காங்கிரஸ் இந்தியாவில் இருந்து மறைந்து விட்டது. 10 நபர்களுடன் தொடங்கப்பட்ட பா.ஜ.க., தற்போது 11 கோடி உறுப்பினர்களுடன் உலகத்தின் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருக்கிறது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.


Next Story