காவிரி நீர் பிரச்சினை: மீண்டும் நடுவர் மன்றம் விசாரணை இல்லை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க முடிவு


காவிரி நீர் பிரச்சினை: மீண்டும் நடுவர் மன்றம் விசாரணை இல்லை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க முடிவு
x
தினத்தந்தி 13 July 2017 5:45 AM IST (Updated: 12 July 2017 11:07 PM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் பிரச்சினை பற்றி மீண்டும் நடுவர் மன்றம் விசாரணை நடத்தாது என்றும், சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளன.

இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் தொடங்கியது.

கர்நாடக அரசின் சார்பில் மூத்த வக்கீல் பாலி நாரிமன் நேற்று 2-வது நாளாக தன்னுடைய வாதத்தை தொடர்ந்தார்.

அவர் நேற்று வாதாடுகையில் கூறியதாவது:-

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மைசூர்-சென்னை மாகாணங்களுக்கு இடையே கடந்த 1924-ம் ஆண்டில் கையெழுத்தான ஒப்பந்தம் 1974-ம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் காவிரி நடுவர் மன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காலாவதியான ஒரு ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் செல்லுபடி ஆகாது.

நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு பாசனத்துக்காக 192 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது. இது 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு நேர் மாறானது. இதை கர்நாடக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. கர்நாடக அரசின் மீது தொடர்ச்சியாக ஒப்பந்தங்கள் திணிக்கப்பட்டு வந்து உள்ளன.

கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து அளிக்க நடுவர் மன்றம் மேற்கொண்டுள்ள வழிமுறை கேள்விக்கு உரியதாகும். தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் உத்தரவு தவறான கணக்கின் அடிப்படையில் அமைந்து உள்ளது. தமிழகத்துக்கு 132 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உரித்தானதாகும். எனவே கோர்ட்டு தலையிட்டு, பிலிகுண்டுலு பகுதியில் தமிழகத்துக்கு 132 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்து விடும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

நடுவர் மன்றம் இந்த மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பகிர்ந்தது தேவையின் அடிப்படையில் அல்ல. காலாவதியான இரு ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் பகிர்ந்து இருக்கிறது. மாநிலங்களின் தண்ணீர் தேவையை நடுவர் மன்றம் எந்த வகையிலும் கருத்தில் கொள்ளவில்லை. எனவே காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு பாலி நாரிமன் கூறியதும் நீதிபதி தீபக் மிஸ்ரா குறுக்கிட்டு, “இந்தியா ஒருதேசம். இங்கு நதிநீர் பங்கீட்டுக்காக இருமாநிலங்கள் மோதிக்கொள்வது சரியானது” அல்ல என்றார்.

அத்துடன், “காவிரி நீர் பங்கீடு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது என்றே வைத்துக்கொண்டாலும் தற்போது எந்த அடிப்படையில் இரு மாநிலங்களும் தண்ணீரை பகிர்ந்து கொள்வது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பில் நதிநீர் பங்கீட்டை சரியான முறையில் செய்யவில்லை என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், சுப்ரீம் கோர்ட்டே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தாவா சட்டப்படி காவிரி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை ஏற்கனவே நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

ஆகவே, நடுவர் மன்றத்துக்கு இந்த வழக்கு மீண்டும் அனுப்பப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யும் ஆதாரங்களையும், ஆவணங்களையும் அடிப்படையாக கொண்டு சுப்ரீம் கோர்ட்டே இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும்.

எனவே நடுவர் மன்றத்தை தொடர்ந்து குறை கூறாமல் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை மட்டுமே முன்வைத்து வாதிடுங்கள். காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான வாதங்களை மட்டும் முன்வையுங்கள். தண்ணீருக்காக மாநிலங்கள் சண்டையிடுவதை சுப்ரீம் கோர்ட்டு விரும்பவில்லை.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

விவாதத்தின் போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி, ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது என்ற வாதத்தை கர்நாடகம் தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும், இதற்கு விரிவான பதிலை ஏற்கனவே தாங்கள் கோர்ட்டில் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெறு கிறது.

கடந்த மார்ச் 21-ந் தேதி இந்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுக்கள் மீது ஜூலை 11-ந் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்கள் (வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள்) விசாரணை நடைபெறும் என்றும், அனைத்து தரப்பினரும் இந்த நாட்களில் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் விசாரணை தொடங்கி நடைபெற்று வரு கிறது.

மேலும் இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரையில், வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story