காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் பீரங்கி தாக்குதலில் ராணுவ வீரர், மனைவியுடன் பலி


காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் பீரங்கி தாக்குதலில் ராணுவ வீரர், மனைவியுடன் பலி
x
தினத்தந்தி 8 July 2017 11:15 PM (Updated: 8 July 2017 9:47 PM)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லையில் மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் தனது மனைவியுடன் பலியானார்.

ஜம்மு,

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த மாதம் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 23 முறையும், எல்லை நடவடிக்கைக்குழுவினர் ஒரு முறையும் அத்துமீறிய தாக்குதலை அரங்கேற்றினர். மேலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியும் இருமுறை நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் 3 இந்திய வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பூஞ்ச் மாவட்டத்தின் ராணுவ நிலைகள் மட்டுமின்றி காதி, கர்மாரா, குல்பூர் உள்ளிட்ட எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தானியங்கி ஆயுதங்களாலும், சிறிய ரக பீரங்கிகளாலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டுமழை பொழிந்தனர். இந்த பீரங்கி குண்டுகள் மக்கள் வாழும் பகுதிகளில் விழுந்து வெடித்தன.

இதில் அப்பகுதியை சேர்ந்த முகமது சவுகத் என்பவரும், அவரது மனைவி சபியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அவர்களின் 3 மகள்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பலியான முகமது சவுகத், காஷ்மீரின் பிரதேச ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு சென்ற போது பாகிஸ்தானின் குண்டுமழைக்கு பரிதாபமாக பலியாகி உள்ளார்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நீண்ட நேரம் தாக்குதல் நடந்ததாக இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்த தாக்குதலால் எல்லையோர பகுதிகளில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

Next Story