குட்டி பிரபஞ்ச அழகியாக ஒடிசா சிறுமி தேர்வு
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பத்மாலயா நந்தா ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற போட்டியில், குட்டி பிரபஞ்ச அழகியாக (லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்) தேர்வாகி, சரித்திரம் படைத்து இருக்கிறாள்.
புதுடெல்லி,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பத்மாலயா நந்தா. இவள், கட்டாக் நகரில் ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள், ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற போட்டியில், குட்டி பிரபஞ்ச அழகியாக (லிட்டில் மிஸ் யுனிவர்ஸ்) தேர்வாகி, சரித்திரம் படைத்து இருக்கிறாள். இந்த போட்டியில், இந்திய சிறுமி ஒருவர், பட்டம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.
இந்த போட்டியின் முதல் சுற்று, ஆன்லைனில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததில், 75 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 10 பேர் இறுதி செய்யப்பட்டு, போட்டிக்கு அழைக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரும் பல சுற்று போட்டிகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த போட்டிக்கு நடுவர்களே கிடையாது. பார்வையாளர்கள் ஆன்லைன் மூலம் ஓட்டுபோட்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
அந்த அடிப்படையில், பத்மாலயா நந்தா, குட்டி பிரபஞ்ச அழகி ஆனாள். அவளுக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. அடுத்த ஆண்டு போட்டி நடைபெறும்வரை, அந்த கிரீடத்தை அவள் பயன்படுத்திக்கொள்ளலாம். கிரீஸ் நாட்டில் செப்டம்பர் மாதம் நடைபெறும் குட்டி உலக அழகி போட்டியில் பத்மாலயா நந்தா கலந்துகொள்கிறாள்.
Related Tags :
Next Story