2-வது நாளாக வீட்டில் இருந்தபடியே 20,049 பேர் வாக்களிப்பு


2-வது நாளாக வீட்டில் இருந்தபடியே 20,049 பேர் வாக்களிப்பு
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் 2-வது நாளாக நேற்று வீட்டில் இருந்த படியே 20,049 பேர் வாக்களித்தனர்.

பெங்களூரு:-

வீட்டில் இருந்தபடியே ஓட்டு

கர்நாடக சட்டசபை தேர்தலில் நாட்டிலேயே முதல் முறையாக 80 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஒட்டுமொத்தமாக 17½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், 80 வயதான வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 80 வயதானவர்கள் 80,250 பேர், மாற்றுத்திறனாளிகள் 19,279 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போட விண்ணப்பித்தனர்.

அதன்படி, அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் வருகிற 6-ந் தேதி இதற்கான ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் 31,119 பேர் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றி இருந்தார்கள்.

103 வயது முதியவர்

இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக நேற்றும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்காக 2,540 தேர்தல் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது.இதையடுத்து, நேற்று பெலகாவி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் ஓட்டுப்பதிவு பெற்றனர். 2-வது நாளான 20 ஆயிரத்து 49 பேர் ஓட்டளித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.நேற்று பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா இங்கலி கிராமத்தை சேர்ந்த 103 வயதான மகாதேவ மகாலிங்க மாலி, ஓட்டளித்து மற்ற இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். அவரின் ஓட்டளிக்கும் ஆர்வத்தை தேர்தல் அதிகாரிகள் பாராட்டினார்கள்.


Next Story