குஜராத் இனக்கலவர விவகாரத்தில் அகமது படேல் மீதான குற்றச்சாட்டு, மோடியின் தப்பிக்கும் உத்தி - காங்கிரஸ்


குஜராத் இனக்கலவர விவகாரத்தில் அகமது படேல் மீதான குற்றச்சாட்டு, மோடியின் தப்பிக்கும் உத்தி - காங்கிரஸ்
x

குஜராத் இனக்கலவர விவகாரத்தில் அகமது படேல் பணம் தந்தார் என்ற குற்றச்சாட்டு, கலவர பொறுப்பில் இருந்து மோடி தப்பிக்கும் உத்தி என்று காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குஜராத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி, கோத்ரா ரெயில் எரிப்பில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெருமளவில் இனக்கலவரங்கள் மூண்டன. 1,000-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இவற்றை அப்போதைய குஜராத் முதல்-மந்திரி மோடி தூண்டி விட்டார். கலவரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதில் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, மோடி குற்றமற்றவர் என்று அறிக்கை அளித்தது.

கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா, சிறப்பு புலனாய்வு குழு அறிக்கைக்கு எதிராக தொடுத்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் மோடியும் அவரோடு சேர்ந்த 63 பேரும் குற்றமற்றவர்கள் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

புதிய குற்றச்சாட்டு

இந்த நிலையில், குஜராத் இனக்கலவரங்களில் மோடியையும், அவரோடு சேர்ந்தவர்களையும் சிக்க வைப்பதற்காகவும், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தவும் குற்றச்சதி செய்து போலி ஆதாரங்களை அளித்ததாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் உள்ளிட்டோர் மீது புதிதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் தீஸ்தா, குஜராத் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சய் பட் ஆகியோர் இப்போது சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தீஸ்தாவின் ஜாமீன் மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வு குழு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மோடி உள்ளிட்டவர்களை சிக்கவைக்க மேற்கொண்ட இந்த குற்றச்சதி, சோனியா காந்தியின் அரசியல் செயலாளராக இருந்த அகமது படேல் தூண்டுதல்பேரில் பின்னப்பட்டது. அவரிடம் இருந்து தீஸ்தா ரூ.30 லட்சம் பணம் பெற்றார் என கூறப்பட்டுள்ளது. அகமது படேல் மரணம் அடைந்து விட்ட நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் சாடல்

இதை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

குஜராத்தில் 2002-ம் ஆண்டு தான் முதல்-மந்திரியாக இருந்தபோது நடந்த இனக்கலவரங்களுக்கு காரணமானவர் என்ற பொறுப்பில் இருந்து தன்னை விடுவிப்பதற்கான பிரதமர் மோடியின் முறையான உத்தியின் ஒரு அங்கம்தான், அகமது படேல் மீதான குற்றச்சாட்டு ஆகும்.

குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அந்த இனப்படுகொலைகளை கட்டுப்படுத்த அவருக்கு விருப்பமும் இல்லை. அதற்கான திறனும் இல்லை. இதனால்தான் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், முதல்-மந்திரியாக இருந்த மோடிக்கு ராஜதர்மத்தை பின்பற்றுமாறு நினைவூட்டினார்.

மோடியின் அரசியல் பழிவாங்கும் எந்திரம், அவரது அரசியல் எதிரிகளாக இருந்து, இறந்தவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை.

'இறந்தவர்களையும் விடவில்லை'

அகமது படேல் மீது திரிக்கப்பட்டுள்ள தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி மறுக்கிறது. தனது அரசியல் எஜமானரின் இசைக்கு ஏற்ப சிறப்பு புலனாய்வுக்குழு ஆடுகிறது. அப்போதைய குஜராத் முதல்-மந்திரி குற்றமற்றவர் என சான்றளித்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிக்கு வெகுமதியாக தூதரக அதிகாரி பதவி அளித்ததை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சோனியா மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

இந்த விவகாரத்தில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "குஜராத் இனக்கலவரங்களில் அன்றைய குஜராத் மாநில அரசை வீழ்த்தவும், முதல்-மந்திரியாக இருந்த மோடியின் அரசியல் வாழ்க்கையை சேதப்படுத்தவும் அகமது படேலை சோனியா காந்தி ஊடகமாக பயன்படுத்தி உள்ளார். இது தொடர்பாக சோனியா காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து, எதற்காக அவர் மோடிக்கு எதிராக சதி செய்தார் என்பதை விளக்க வேண்டும்" என கூறினார்.மேலும் சோனியா காந்தியால்தான் தீஸ்தாவுக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இது அரசியல் அரங்கில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.


Next Story