டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரிப்பு..!
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கரத் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:-
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு பீம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது.
2018-19 ஆம் நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் சேவைகளை தடையற்ற முறையில் வழங்க வங்கிகளும் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்துகின்றன.
பீம் யுபிஐ, யுபிஐ-123, ஆதார் பரிவர்த்தனை பாலம், ஏஇபிஎஸ் போன்ற பல முன்முயற்சிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் மற்றும் வங்கிகளால் செயல்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.