மத நிகழ்வில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு உடல்நலக் குறைவு
சிகிச்சைக்குப் பிறகு தற்போது அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சோம்தானா கிராமத்தில் 'ஹரினம் சப்தா' என்ற மத நிகழ்ச்சி ஒருவார காலம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பிரசாதத்தை சாப்பிட்ட சுமார் 200 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு தற்போது அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பலர் குணமடைந்து இன்றைய தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மத நிகழ்வில் வழங்கப்பட்ட பிரசாதத்தின் மாதிரிகள் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.