காட்டுயானை தாக்கி 2 பெண் தொழிலாளர்கள் படுகாயம்; வனத்துறையினருடன் மக்கள் வாக்குவாதம்
சித்தாப்புரா அருகே காட்டு யானை தாக்கி 2 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். வனத்துறையினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடகு;
2 பேர் படுகாயம்
குடகு மாவட்டம் சித்தாபுரா அருகே துபனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அந்தப்பகுதியில் கடந்த சில தினங்களாக காபி தோட்டங்களில் புகுந்து காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களான சரிதா (வயது 30), லலிதா (40) 2 பேரும் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள காபி தோட்டத்தில் வேலைபார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று ெவளியேறி காபி தோட்டத்துக்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும், அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனாலும் காட்டு யானை 2 பேரையும் தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.
மேலும் அவர்களை காலால் மிதித்து தாக்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்குள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்தவர்கள், காட்டு யானையை விரட்டியடித்து2 பேரையும் மீட்டனர். காட்டு யானை தாக்கியதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
வாக்குவாதம்
இதையடுத்து அவர்கள் 2 பேரும் சித்தாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.