மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் சாவு; தோட்டத்துக்கு மின் இணைப்பு கொடுத்த விவசாயி கைது


மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் சாவு; தோட்டத்துக்கு மின் இணைப்பு கொடுத்த விவசாயி கைது
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் செத்த விசாரணையில் தோட்டத்துக்கு மின் இணைப்பு கொடுத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

சிவமொக்கா;


சிவமொக்கா தாலுகா ஆயனூர் அருகே சன்னஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு தேடி கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், காட்டு யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த சந்திரா நாயக் (வயது 51) என்ற விவசாயி, தனது தோட்டத்தை சுற்றி வேலி அமைத்து சட்டவிரோதமாக மின் இணைப்பு கொடுத்திருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த 2 காட்டு யானைகள், சந்திர நாயக்கின் தோட்டத்துக்குள் நுழைய முயன்றபோது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக செத்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சந்திரா நாயக் தனது தோட்டத்தை சுற்றி சட்டவிரோதமாக வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்தது தெரியவந்தது.

இதற்கிடையே சம்பவம் நடந்ததும் சந்திரா நாயக் தலைமறைவானார். அவரை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சந்திரா நாயக்கை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story