கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் அரசின் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக வீரர்-வீராங்கனைகள்

பர்மிங்காமில் சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்தனர். இதில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்ற இந்தியா 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இதில் கர்நாடகத்தை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் குருராஜ் பூஜாரி வெண்கல பதக்கம் வென்று இருந்தார். அதுபோல் பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கலப்பு இரட்டை பிரிவில் பங்கேற்று வௌ்ளி பதக்கமும் வென்றார். அதுபோல் காமன்வெல்த் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெள்ளி வென்றிருந்தது. இதில் கர்நாடகத்தை சேர்ந்த வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் இடம்பெற்றிருந்தார்.

இந்த நிலையில் காமென்வெல்த் போட்டியில் சாதனை படைத்த கர்நாடக வீரர் குருராஜ் பூஜாரி, வீராங்கனைகள் அஸ்வினி பொன்னப்பா, ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோருக்கு பாராட்டு விழா பெங்களூருவில் நடந்தது.

பாராட்டு

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த வீரர்களை பாராட்டினார். அவர்களுக்கு தலைப்பாகை அணிவித்து சால்வை அணிவித்து கவுரவித்தார்.

வீரர் குருராஜ் பூஜாரிக்கு ரூ.8 லட்சம், வீராங்கனைகள் ராஜேஸ்வரி கெய்க்வாட் மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோருக்கு தலா ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-மந்திரி வழங்கி பாராட்டினார்.

பேச்சு

பின்னர் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை பேசியதாவது:-

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை அரசு உணர்ந்துள்ளது.

நாட்டிற்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுகிறோம் என்ற எண்ணம் உங்களின் மனதில் எப்போதும் இருக்க வேண்டும். மற்ற விஷயங்களை அரசிடம் விட்டு விடுங்கள். உங்கள் நலனை நாங்கள் கவனித்து கொள்கிறோம்.

பாதுகாப்பு உறுதி

விளையாட்டு தத்தெடுப்பு திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. விளையாட்டு திடல்களை அரசு மேம்படுத்தி வருகிறது. பேட்மிண்டன் ஆட்டம் கர்நாடகத்தின் விளையாட்டு என்று கருதி அதை ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளோம். விளையாட்டு திறன் கொண்டவர்களை அடையாளம் காணும் நோக்கத்தில் இன்னும் 2 மாதத்தில் கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பை தொடங்க இருக்கிறோம்.

எங்கள் அரசு விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன்களை காக்க முன்னுரிமை அளிக்கிறது. நீங்கள் எதை பற்றியும் சிந்திக்காமல் விளையாட்டில் கவனம் செலுத்தி சாதனை பெற முயற்சி செய்யுங்கள். எல்லா வகையிலும் உங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். விளையாட்டு மனநிலை மிக முக்கியம். அத்தகைய மனநிலையால் அதிகம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வாழ்க்கையில் ஒழுக்க பண்புகளை விளையாட்டு கற்று கொடுக்கிறது.

நமக்கு உந்துசக்தி

விளையாட்டு வீரர்களிடம் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கும். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விளையாட வேண்டும். கர்நாடகத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களும் உள்ளனர். அவர்களின் சாதனை நமக்கு உந்துசக்தி.

கர்நாடக வீரர்களின் திறமை மீது அரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது. சாதித்துள்ள வீரர்களை பார்த்து உத்வேகம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாட்டு பயிற்சி பெற்று வரும் 75 வீரர்களை இந்த விழாவில் பங்கேற்க செய்துள்ளோம். இதன் மூலம் அவர்களுக்கு உந்துசக்தி கிடைக்கும்.

அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு

பயிற்சி பெறும் வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது. இதை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேலை கிடைக்கும் என்ற நோக்கத்தில் விளையாட வேண்டாம். நாட்டிற்காக விளையாடி பதக்கம் பெற வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு போலீஸ் மற்றும் வனத்துறையில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் அரசின் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசினார்.

போலீஸ்- வனத்துறை

இதற்கு முன்பு விளையாட்டு வீரர்களுக்கு கர்நாடக அரசின் போலீஸ் மற்றும் வனத்துறையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் அரசின் அனைத்து துறைகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story