அமெரிக்காவில் குருத்வாராவில் துப்பாக்கி சூடு - 2 பேர் படுகாயம்
அமெரிக்காவில் குருத்வாராவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சீக்கியர்களின் பாரம்பரிய பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் குருத்வாரா வளாகத்தில் கூடியிருந்தவர்களில் 2 பேர் திடீரென தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு முற்றியதில் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாறி மாறி சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் பயந்து அங்கும், இங்குமாக சிதறி ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் தகராறில் ஈடுபட்ட இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அதில் ஒருவர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றொருவர் போலீசுக்கு பயந்து துப்பாக்கி குண்டு காயத்துடன் தப்பி சென்றார்.
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் நிலையில் குருத்வாராவில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் இது சீக்கியர்கள் மீதான வெறுப்பின் காரணமாக நடந்த சம்பவம் இல்லை என்றும், 2 தனிநபர்களுக்கு இடையிலான பிரச்சினை என்றும் கலிபோர்னியா போலீசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.