காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 2 பேர் கைது
இறைச்சிக்காக மாடுகள் கடத்திய காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
யஸ்வந்தபுரம்:-
பெங்களூரு யஸ்வந்தபுரம் ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இறைச்சிக்காக மாடுகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் இறங்கினர். அப்போது அந்த வழியாக வந்த காரை அவர்கள் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் மாடுகள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பிரசாந்த் மற்றும் சோமுகவுடா உள்பட 4 பேர் என்பதும், இதில் பிரசாந்த், சோமு கவுடா ஆகியோர் காங்கிரஸ் பிரமுகர்கள் என்பதும் தெரிந்தது.
மேலும் அவர்கள் மாகடியில் இருந்து கார் மூலம் மாடுகளை இறைச்சிக்காக கடத்தியது தெரிந்தது. அந்த மாடுகளை சிவாஜிநகரில் உள்ள இறைச்சி கடையில் விற்பனை செய்ய சென்றபோது போலீசிடம் சிக்கியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மாடுகளை மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் இதுபோன்ற மாடுகள் கடத்தல் சம்பவம் அதிகரிக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.