பணம் சம்பாதிக்கும் ஆசையில் நகைக்கடையில் திருடிய ஊழியர் உள்பட 2 பேர் கைது
பணம் சம்பாதிக்கும் ஆசையில் நகைக்கடையில் திருடிய ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபுரம் 1-வது மெயின் ரோட்டில் உள்ள நகைக்கடையில் ஊழியராக சேத்தன் நாயக் என்பவர் வேலை செய்தார். அந்த கடைக்கு சமீபத்தில் வந்த ஒரு நபர், தங்க சங்கிலியை ஆர்டர் செய்துவிட்டு, பணத்தை கொடுத்துவிட்டு சென்றிருந்தார். மறுநாள் தங்க சங்கிலியை அவர் வாங்க வந்தபோது அது காணாமல் போய் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது சேத்தன் நாயக், தங்க சங்கிலியை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுதவிர கடையில் இருந்து மேலும் சில தங்க நகைகளை சேத்தன் நாயக் திருடியதும் தெரிந்தது. இதுபற்றி யஷ்வந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாத்தனர். உடனே சேத்தன் நாயக் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில், நகைக்கடையில் திருடிய வழக்கில் சேத்தன் நாயக், அவரது நண்பரான விஜய் ஆகிய 2 பேரையும் யஷ்வந்தபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தான் வேலை செய்த கடையிலேயே தங்க நகைகளை சேத்தன் நாயக் திருடி, தனது நண்பரிடம் கொடுத்து விற்று வந்தது தெரிந்தது. கைதான 2 பேரிடம் இருந்தும் ரூ.26¼ லட்சம் மதிப்பிலான 373 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கைதான 2 பேரும் விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.