மதுகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்


மதுகுடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பத்ராவதியில் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சிவமொக்கா:-

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா பி.ஆர். பிராஜெக்ட் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சாந்தராஜப்பா. இவர் பள்ளி நிர்வாகிகளிடம் கூறாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பாமல் கையாடல் செய்துள்ளார். பள்ளியில் மாணவர்களுக்கு சமைப்பதற்காக பயன்படுத்தப்படும் உணவு பொருட்களை வீட்டிற்கு எடுத்து சென்று வந்தார். இதேபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது கூறப்பட்டது. மேலும் இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டது.

மது குடித்துவிட்டு...

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தராஜப்பா மது குடித்துவிட்டு வந்து பாடம் நடத்தியுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மாவட்ட கல்வித்துறை அதிகாரி

பரமேஸ்வர், நேற்று முன்தினம் சாந்தராஜப்பாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதேபோல தொட்டகொப்பனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சவிதா. இவர் வகுப்பில் படித்து வரும் மாணவர்களை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு பெற்றோர் வந்தால் அவர்களை அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரி பரமேஸ்வருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்ற கல்வித்துறை அதிகாரி பரமேஸ்வர் விசாரணை நடத்தி, ஆசிரியை சவிதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story