சுள்ளியாவில் நடந்த பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது
சுள்ளியாவில் நடந்த பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் பதுங்கி இருந்தபோது சிக்கினர்.
மங்களூரு:
பா.ஜனதா பிரமுகர் படுகொலை
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் பிரவீன் அந்தப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி இரவு அவர் தனது கடையை மூடி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிரவீனை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
வன்முறை
இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகரான பிரவீன் கொலை சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பெல்லாரே பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. நேற்று முன்தினம் பிரவீனின் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது வன்முறை வெடித்தது. சாலையில் நின்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் பிரவீன் கொலையை கண்டித்து நேற்று முன்தினம் சுள்ளியா, கடபா, புத்தூர் ஆகிய 3 தாலுகாக்களில் முழுஅடைப்பு போராட்டமும் நடந்தது. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நெட்டார் கிராமத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
2 பேர் கைது
கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) அலோக் குமார் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரது உத்தரவின்பேரில் மங்களூரு நகர போலீஸ், உடுப்பி போலீசார் தலைமையில் மர்மநபர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த கொலை தொடர்பாக 21 பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இந்த நிலையில் பிரவீன் கொலையில் தொடர்புடையதாக 2 பேரை கேரள மாநிலம் காசர்கோட்டில் வைத்து கைது செய்துள்ளதாக தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் பகவான் தெரிவித்துள்ளார். விசாரணையில், ஹாவேரி மாவட்டம் சவனூரை சேர்ந்த ஜாகீர் (29), பெல்லாரேவை சேர்ந்த முகமது ஷபிக் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் எதற்காக பிரவீனை கொலை செய்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பிரவீனின் தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு
படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் தந்தை சேகர் பூஜாரி, இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் மகன் இறந்த செய்தி கேட்டு அவர் நிலைகுலைந்து போனார்.
யாரிடமும் எதுவும் பேசாமல் அவர் அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆம்புலன்சில் பெல்லாரேயில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கைதானவரின் கடை சூறை
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் கொலை வழக்கில் பெல்லாேரயை சேர்ந்த முகமது ஷபிக் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான முகமது ஷபிக், சுள்ளியாவில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் பிரவீன் கொலை வழக்கில் முகமது ஷபிக் கைது செய்யப்பட்டது தெரியவந்ததால், நேற்று அவரது கடையை மர்மநபர்கள் சூறையாடினர்.
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டாரை, 3 மர்மநபர்கள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த நிலையில் பிரவீனை மர்மநபர்கள் கொலை செய்யும் காட்சி அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரின் நெஞ்சை பதற வைக்கிறது.