அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அமைகிறது- மத்திய மந்திரிசபை ஒப்புதல்
அடுத்த 5 ஆண்டுகளில், கிராமங்களில் சுமார் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு அமைப்புகள் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், 'துடிப்பான கிராமங்கள்' திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 2022-2023 நிதி ஆண்டில் இருந்து 2025-2026 நிதி ஆண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வடக்கு எல்லையில் உள்ள 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வாழ்வாதார வாய்ப்புக்கு இத்திட்டம் வழிவகுக்கும். மேலும், அங்கிருக்கும் மக்கள் வேலைக்காக இடம்பெயர்வதை தடுப்பதுடன், எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவும் பயன்படும்.
இந்தியாவில் தற்போது 63 ஆயிரம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில், இன்னும் இச்சங்கங்கள் தொடங்கப்படாத கிராமங்களிலும், பஞ்சாயத்துகளிலும் 2 லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மற்றும் பால்வள கூட்டுறவு அமைப்புகள், மீன்வள கூட்டுறவு அமைப்புகள் ஆகியவை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதும், கீழ்மட்டம் வரை அதை கொண்டு செல்வதும் திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். இவை விவசாயிகள் தங்கள் வருவாயை பெருக்கிக்கொள்ள பயன்படும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை பெருக்கவும் உதவும்.
இந்தியா-சீனா இடையிலான அசல் எல்லை கோட்டை பாதுகாக்கும் இந்தோ-திபெத்திய எல்லை படையில் புதிதாக 9 ஆயிரத்து 400 வீரர்களை சேர்க்கவும், 7 புதிய படைப்பிரிவுகளை உருவாக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.இந்த புதிய வீரர்கள், அசல் எல்லை கோடு பகுதியில் புதிதாக அமைக்கப்படும் 47 புறக்காவல் நிலையங்கள், படைவீரர் முகாம்கள் ஆகியவற்றில் காவல் பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள்.இந்த தகவல்களை மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் தெரிவித்தார்.