விவாகரத்து கோரிய 2 தம்பதிகள் லோக் அதாலத் மூலம் இணைந்தனர்
கொப்பல் அருகே விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 2 தம்பதிகள், லோக் அதாலத் மூலம் மீண்டும் இணைந்தார்கள். நீதிபதி முன்னிலையில் 2 தம்பதியும் மாலை மாற்றிக் கொண்டனர்.
பெங்களூரு:
கொப்பல் அருகே விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த 2 தம்பதிகள், லோக் அதாலத் மூலம் மீண்டும் இணைந்தார்கள். நீதிபதி முன்னிலையில் 2 தம்பதியும் மாலை மாற்றிக் கொண்டனர்.
குடும்ப பிரச்சினையால் பிரிவு
கொப்பல் மாவட்டம் கங்காவதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி உமா மகேஷ்வரி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் சுரேசும், உமா மகேஷ்வரியும் பிரிந்து விட்டனர். பின்னர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விவாகரத்து கோரி கங்காவதி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கங்காவதி கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் லோக் அதாலத் நடந்தது. அப்போது சுரேஷ், உமா மகேஷ்வரி தம்பதியை நீதிபதி சமாதானப்படுத்தினார். குழந்தையின் நலன் கருதி 2 பேரும் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தினார்.
தம்பதிகள் இணைந்தனர்
அப்போது 2 பேரும் மீண்டும் சேர்ந்து வாழ்வதாகவும், விவாகரத்து முடிவை கைவிடுவதாகவும் நீதிபதியிடம் கூறினர். இதையடுத்து, கங்காவதி கோர்ட்டிலேயே நீதிபதி முன்னிலையில் 2 பேரும் மாலை மாற்றிக் கொண்டும், ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மீண்டும் இணைந்தார்கள். அவர்களுக்கு நீதிபதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் விவாகரத்துக்கு கோரி மனு தாக்கல் செய்திருந்த சங்கரப்பா மற்றும் ஸ்வப்னா தம்பதியும் லோக் அதாலத் மூலமாக மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்து மாலை மாற்றிக் கொண்டனர்.