விதான சவுதா கட்டிடத்தை வீடியோ எடுத்த 2 பேர் மீது வழக்கு
டிரோன் மூலம் விதான சவுதா கட்டிடத்தை வீடியோ எடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு:
பெங்களூருவில் விதான சவுதா கட்டிடம் உள்ளது. மாநிலத்தின் அதிகார மையமாக விளங்கும் இந்த கட்டிடம் நாட்டில் உள்ள சிறந்த கட்டிட கலைக்கு ஒரு எடுத்துகாட்டாகவும் இருக்கிறது. இதனால் பெங்களூருவுக்கு சுற்றுலா வருபவர்கள், விதான சவுதா முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் நேற்று விதான சவுதா முன்பு பொது மக்கள் பலரும் புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் விதான சவுதா கட்டிடத்தை புகைப்படம் எடுக்க டிரோனை பயன்படுத்தினர்.
அங்கு டிரோன் பறப்பதை அறிந்த விதான சவுதா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலை செய்து வருபவர்கள் என்பதும், அவர்கள் அருண் மற்றும் வினோத் ஆகியோர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.