போலி விசா தயாரித்த 2 ஆப்பிரிக்கர்கள் கைது
டெல்லி சந்தர் விகார் பகுதியில் போலி விசா தயாரித்த 2 ஆப்பிரிக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:
டெல்லி சந்தர் விகார் பகுதியில் வசிக்கும் 2 ஆப்பிரிக்க நாட்டவர்கள் போலியாக இந்திய விசா தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த இருவரின் இருப்பிடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், அவர்கள் போலியாக இந்திய விசாக்களை தயாரித்தது உறுதியானது.
கானா நாட்டைச் சேர்ந்த ஒர்டேகா லியோனார்டு, கோட்டே டி ஐவாய்ரை சேர்ந்த டயமண்ட் அலி ஆகிய அந்த இருவரும், இந்திய விசா காலம் முடிந்த ஆப்பிரிக்கர்கள் பலருக்கும் போலியாக விசா தயாரித்துக்கொடுத்துள்ளனர். அவர்கள் தங்களுக்கும் போலியான விசாக்களை பயன்படுத்தியுள்ளனர்.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் போலியான விசாக்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்திய லேப்டாப்பையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுவரை 30-க்கும் மேற்பட்ட போலி விசாக்களை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தயாரித்த போலி விசாக்களை பயன்படுத்தியதாக கூறப்படும் ஆப்பிரிக்கர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.