விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்ததால் பிறந்து 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சாவு?
விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்ததால் பிறந்து 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்தது.
ராய்ச்சூர்:
ராய்ச்சூர் மாவட்டம் மண்டிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு கடந்த 19 நாட்களுக்கு முன்பாக தான் குழந்தை பிறந்திருந்தது. சம்பவத்தன்று, நள்ளிரவில் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு சுமதி தூங்க வைத்திருந்தார். இந்த நிலையில், மறுநாள் அதிகாலையில் அந்த குழந்தை வாயில் ரத்தம் வந்ததும், வயிறு பெரிதாகியும் உயிர் இழந்திருந்தது. இதனால் சுரேஷ் பாபு, அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். இந்த நிலையில், பச்சிளம் குழந்தை சாவுக்கு மண்டிபேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக அதிக சத்தத்துடன் பாட்டு வைத்திருந்தே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது மண்டிபேட்டையில் விநாயகர் சிலை கரைப்புக்காக விடிய, விடிய அதிக சத்தத்துடன் பாட்டு ஒலித்ததுடன், மேளங்கள் முழங்கியதுடன், வாலிபர்கள் சத்தம் போட்டபடியே இருந்துள்ளனர். அந்த சத்தம் காரணமாக பச்சிளம் குழந்தைக்கு நெஞ்சுவலி உண்டாகி வாயில் ரத்தம் வந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிக சத்தமே தனது குழந்தையின் சாவுக்கு காரணம் என்று சுரேஷ் பாபு, சுமதி குற்றச்சாட்டு கூறியுள்ளனர். ஆனால் பச்சிளம் குழந்தையின் சாவுக்கு சரியான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் மண்டிபேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.