கடந்த ஓராண்டில் 188 போலீசார் உயிர்த்தியாகம் - உள்துறை மந்திரி அமித்ஷா
ஓராண்டு காலத்தில், சட்டம்-ஒழுங்கை காக்கும் பணியின்போது 188 போலீசார் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்று உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
காவலர் வீரவணக்க நாள்
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி, லடாக்கின் வெந்நீர் ஊற்று பகுதியில் 10 போலீசார் சீன ராணுவத்தினரின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அவர்களை நினைவுகூரும் விதமாகவும், பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தும்விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.
அமித்ஷா பேச்சு
அந்தவகையில் காவலர் வீரவணக்க நாளையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில், நாட்டில் சட்டம்-ஒழுங்கை காக்கும் பணியின்போது 188 போலீசார் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்கள் குடும்பத்தின் தியாகத்தை நாடு எப்போதும் மறக்காது.
பயங்கரவாதத்துக்கு எதிராக சிறிதும் சகிப்புத்தன்மை அற்ற கொள்கையை பின்பற்றும் பிரதமர் நரேந்திர மோடி அரசு, அதற்காக கண்டிப்பான சட்டங்களை உருவாக்கியுள்ளது.
நமது போலீஸ் படையை, பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த படையாக உருவாக்கும்வகையில் அதை நவீனப்படுத்துவதற்காக, போலீஸ் தொழில்நுட்ப இலக்கு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
3 மசோதாக்கள்
குற்றவியல் நீதி நடைமுறையை முழுமையாக சீரமைப்பதற்காக மத்திய அரசு 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. 150 ஆண்டு கால சட்டங்களுக்கு மாற்றாக அமையும் இவை, அனைத்து மக்களுக்கும் அரசியல் சாசன உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யும். இந்த சட்டங்கள், இந்தியத் தன்மையையும் பிரதிபலிக்கும். கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
65 சதவீதம் குறைந்தது
கடந்த 10 ஆண்டுகளில் சில மாநிலங்களில் இடதுசாரி பயங்கரவாதமும், வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் பயங்கரவாதமும் உச்சத்தில் இருந்தன. வீரமிக்க போலீசாரின் முயற்சியால் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாத சம்பவங்கள் 65 சதவீதம் குறைந்துள்ளன. காவல் பணியில் மட்டுமல்ல, பேரிடர் காலங்களில் மீட்புப் பணியிலும் போலீசார் முக்கியப் பங்காற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.