16-வது நிதிக்குழு நவம்பரில் அமைக்கப்படும்: மத்திய நிதித்துறை செயலாளர் தகவல்
16-வது நிதிக்குழு நவம்பர் மாத இறுதிக்குள் அமைக்கப்படும் என்று மத்திய நிதித்துறை செயலாளர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நிதிக்குழு என்பது அரசியல் சட்ட அமைப்பு ஆகும். மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான நிதி உறவு குறித்து அக்குழு சிபாரிசு செய்கிறது. நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் வரி வருவாயை மத்திய-மாநில அரசுகளுக்கிடையே எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்வது என்று நிதிக்குழு சிபாரிசு செய்கிறது.
முந்தைய 14-வது நிதிக்குழு, மாநிலங்களுக்கு 42 சதவீத வரிவருவாயை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறியது. தற்போதைய 15-வது நிதிக்குழுவும் அதே 42 சதவீத வரிபகிர்வை சிபாரிசு செய்துள்ளது.
15-வது நிதிக்குழுவின் காலம், 2025-2026 நிதிஆண்டுடன் முடிவடைகிறது.
16-வது நிதிக்குழு
இந்நிலையில், அடுத்த 16-வது நிதிக்குழு, நவம்பர் மாத இறுதிக்குள் அமைக்கப்படுகிறது. இத்தகவலை மத்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தெரிவித்தார்.
ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
16-வது நிதிக்குழு, நவம்பர் மாத இறுதிக்குள் அமைக்கப்படும். அது சட்டரீதியான தேவை ஆகும். நிதிக்குழுவுக்கான பணி வரன்முறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.
2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு வரிவருவாயில் எத்தனை சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது என்று 16-வது நிதிக்குழு சிபாரிசு செய்யும்.
நிதி பற்றாக்குறை
நடப்பு நிதிஆண்டில், நிதிபற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை 2025-2026 நிதிஆண்டுக்குள் 4.5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
வரிவருவாய், வரியில்லாத வருவாய் ஆகியவை அதிகமாக இருப்பதால், செலவின தேவையை சமாளிக்க முடியும் என்றும், பங்கு விற்பனையில் சரிவு இருந்தாலும் பூர்த்தி செய்ய முடியும் என்றும் கருதுகிறோம்.
அதுபோல், பட்ஜெட்டில் மதிப்பிட்டதை விட ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து அதிகமான லாப ஈவுத்தொகை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.