அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடிய 16 வயது கேரள வாலிபர் திடீர் மரணம்


அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடிய 16 வயது கேரள வாலிபர் திடீர் மரணம்
x

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி பெற்ற வெற்றியை கொண்டாடிய 16 வயது கேரள வாலிபர் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.



கொல்லம்,


22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக், நாக்-அவுட் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதி போட்டிக்குள் நுழைந்தன.

உலக கோப்பை மகுடம் யாருக்கு என நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதின. இதில் அனல் பறந்த ஆட்டத்தில் போட்டி நிறைவில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் அணிகள் தலா ஒரு கோல் அடித்ததில் 3-3 என மீண்டும் போட்டி சமனானது.

இதனை தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி, அர்ஜென்டினா வெற்றி பெற்றது. உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டமும் வென்று வரலாறு படைத்தது.

இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களில் கண்டு களித்தனர். இதேபோன்று கேரளாவின் கொல்லம் நகரில் லால் பகதூர் ஸ்டேடியத்தில், உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டிக்கான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இதனை கொல்லம் நகரை சேர்ந்த அக்சய் (வயது 16) என்ற வாலிபர் பார்த்துள்ளார். நேற்று இரவில் அர்ஜென்டினா அணி பெற்ற வெற்றியை கொண்டாடி உள்ளார். இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த அவர் திடீரென மயங்கி, சரிந்து உள்ளார்.

உடனடியாக அவரை உள்ளூர் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவரது மரணத்திற்கான காரணம் பற்றி தெரிய வரும். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.


Next Story