சிவமொக்காவில் வருகிற 23-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு; கலெக்டர் செல்வமணி தகவல்


சிவமொக்காவில் வருகிற 23-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு;  கலெக்டர் செல்வமணி தகவல்
x

இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சிவமொக்காவில் வருகிற 23-ந்தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாகவும் கலெக்டர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா;


மத நல்லிணக்க கூட்டம்

கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டமான சிவமொக்காவில் கடந்த சில மாதங்களாக இருதரப்பினர் இடையே மோதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அனைத்து சமூகத்தினருடன் மத நல்லிணக்க கூட்டம் நடந்தது.

இதில், கிழக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தியாகராஜன், கலெக்டர் செல்வமணி, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அனைத்து சமூக தலைவர்களும் கலந்துகொண்டனர்.

கடும் நடவடிக்கை

இந்த கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி. தியாகராஜன் பேசுகையில், சிவமொக்கா நகரில் அமைதியை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களும் உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பி மக்களின் அமைதியை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நகரில் எங்காவது சட்டத்துக்கு புறம்பான சம்பவங்கள், மோதல்கள் நடந்தால் அதுபற்றி பொதுமக்கள் 122 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

144 தடை உத்தரவு

இதையடுத்து கலெக்டர் செல்வமணி பேசுகையில், அனைத்து சமூகத்தினரும் சிவமொக்கா நகரில் அமைதியை நிலைநாட்டி சுமுகமான சூழலை கொண்டு வர மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். நகரில் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், போலீசாரின் பாதுகாப்பு தொடரும். இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

வியாபாரிகள், வணிகர்களின் கோரிக்கையை ஏற்று இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டு இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. வருகிற 23-ந்தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. தியேட்டர்களில் இரவு நேர காட்சி ரத்து செய்யப்படுகிறது என்றார்.


Next Story