14 வயது சிறுமி பலாத்காரம்: தந்தை-மகனுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை உடுப்பி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


14 வயது சிறுமி பலாத்காரம்: தந்தை-மகனுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை உடுப்பி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 1:37 PM IST)
t-max-icont-min-icon

உடுப்பியில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை-மகனுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உடுப்பி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மங்களூரு-

உடுப்பியில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை-மகனுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உடுப்பி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

14 வயது சிறுமி

தாவணகெரேவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 58). இவரது மகன் சச்சின்(28). சிவசங்கருக்கும், உடுப்பி டவுன் பகுதியில் வசித்து வந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து சிவசங்கர் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கினார். அதுமட்டுமின்றி சிவசங்கரின் மகனும், அதே வீட்டில் தங்கினார். கடந்த 2020-ம் ஆண்டு அந்த பெண் வீட்டில் இல்லாத நேரங்களில், சிவசங்கர் தனது தோழியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதுபோல் அவரது மகன் சச்சினும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவ்வாறாக அவர்கள் இருவரும் சுமார் ஒருவருடமாக அந்த சிறுமியை பாழாக்கி வந்துள்ளனர்.

தாய் பிறழ் சாட்சியம்

இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பக்கத்து வீட்டினரிடம் தெரிவித்து உள்ளாள். அவர்கள் இதுபற்றி உடுப்பி டவுன் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரையும், சச்சினையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது உடுப்பி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், 22 சாட்சிகளில் 15 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பிறழ் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தலா 20 ஆண்டுகள் சிறை

இருப்பினும் சிறுமியின் வாக்குமூலம் மற்றும் பிற சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் நீதிபதி சீனிவாச சுவர்ணா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர், சச்சின் ஆகிய 2 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று உடுப்பி மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக சிவசங்கரும், சச்சினும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி சீனிவாச சுவர்ணா, வழக்கில் குற்றவாளிகளான சிவசங்கர் மற்றும் சச்சினுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் சிவசங்கர், சச்சினை மங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story