ஆந்திராவில் ரெயில் விபத்துக்கு காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்


ஆந்திராவில் ரெயில் விபத்துக்கு காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 30 Oct 2023 10:26 AM IST (Updated: 30 Oct 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் நிகழ்ந்த ரெயில் விபத்துக்கு "சிக்னலை லோகோ பைலட் கவனிக்காததே காரணம்" என்ற தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயநகரம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.

அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.

அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 8 பயணிகள் பலியாகினர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ரெயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, பலியானவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். உடனடியாக மீட்பு, சிகிச்சைப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சம்பவ இடத்துக்கு கிழக்கு கடற்கரை ரெயில்வே அதிகாரிகளும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ரெயில் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதில், ரெயில்வே அதிகாரிகளின் தவறால் இந்த சோக சம்பவம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிக்னலை லோகோ பைலட் கவனிக்காததே இந்த விபத்துக்கு காரணம் என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரெயில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று விசாகபட்டினம் செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story